Tuesday, November 8, 2011

ப்ரண்ட்ஸ் - விமர்சனம்


முதல் பாதி வயிற்று வலி. அடுத்த பாதி மனசு வலி. இப்படி சரி பாதியாக பிரித்துக் கொண்டிருக்கிறது ப்ரண்ட்ஸ். முந்தைய ஆட்சியாளர்களும் தனி நீதிமன்றமும் மாதிரி இணைபிரியாத தோழர்கள் சூர்யாவும் விஜயும். அதிலும் விஜய் இருக்கிறாரே, அரட்டையோ அரட்டை! பார்க்கிற பெண்ணிடம் எல்லாம் ''ல்தகா சைஆ'' இருக்கா? என்று அப்ளிகேஷன் போடுகிற ஆள். சென்னைக்கு நண்பனை பார்க்க வரும் இருவரும் அங்கு பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு போகிறார்கள். போகிற இடத்தில் அதே ''ல்தகா சைஆ'' வினால் குழப்பம். நண்பனுக்காக போராடி தேவயானியின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விஜய்க்கு அவரை கட்டி வைக்கிறார் சூர்யா. வலுக்கட்டயமாய் தன்னை கட்டிச்செல்லும் விஜயை பழிவாங்காமல் அதற்கு காரணமாக இருந்த சூர்யாவை பழிவாங்க துடிக்கிறார் தேவயானி. அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் நண்பர்களை பிரிக்கிறது. இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பது முடிவு.

இளமையின் வேகம் எதுவரைக்கும் என்பதை அந்த துள்ளல் குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சித்திக். தன் நண்பனின் ஸ்கூட்டரை எரித்த பக்கத்து ஊர் பெரிய மனிதரின் காரை கொளுத்துவதும், மொட்டை கடுதாசிப்போட காரணமான நண்பனை பிடித்து நையபுடைப்பதற்காக லாரி ஏறி சென்னைக்கு வருவதும், சும்மா சொல்லி வைப்போமே! என்று பார்க்கிற பெண்ணிடம் எல்லாம் லவ் அப்ளிகேஷன் போடுவதும், விஜயின் குறும்புகள் ரசிக்க வைக்கிறது. அதிலும் வடிவேலுவிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சேர்ந்துவிட்டு அப்பாவித்தனமாய் அவர் செய்யும் சேஷ்டைகள் ரொம்பவே ஜாலி.

படத்தில் சூர்யாவின் அறிமுகம் சாதாரணமாக அமைக்கப்பட்டிருந்தாலும் நடிப்பில் கொடிகட்டியிருக்கிறார். அத்தனை பேரின் முன்னிலையில் தன் நண்பனுக்காக தெரிந்து கொண்டு தேவயானி மேல் குற்றம் சுமத்தும்போதும், தன் நண்பனின் பிள்ளைக்கு தன் பெயரை சூட்டியிருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் பொங்கி வெடித்து அழும்போதும், அவனுக்கு மனநோய் என்று தெரிந்ததும் தவித்துப்போய் கதறும் போதும், ''சூர்யா சூப்பர்யா!'' என்று சொல்ல வைக்கிறார். (டைட்டிலில், விஜயை 'இளைய தளபதி' என்று குறிப்பிட்ட மாதிரி சூர்யாவிற்கும் ஒரு பட்டம் கொடுத்திருக்கலாம் )

பெயிண்ட்டர் வடிவேலுவின் அட்டகாசத்தில் கலங்கிப்போகிறது தியேட்டர் மொத்தமும். அந்த டைமிங், அந்த டயலாக் பிரசண்டேஷன், இதெல்லாம் வடிவேலுவுக்கே உரிய பொக்கிஷம். சார்லியும் ரமேஷ்கன்னாவும் கூட சிரிக்க வைக்கிறார்கள்.

புதுமுகம் விஜயலட்சுமி. தமிழ் படங்களுக்கு கிடைத்த விசேஷலட்சுமி.

இசை இளையராஜா. பின்னணி இசை கொஞ்சுகிறது. பாடல்களும் இனிமை.

வேடந்தாங்கல் போன்ற குடும்பம், சின்ன சின்ன மகிழ்வுகள். சின்ன சின்ன கோபங்கள் இதையெல்லாம் நுட்பமாய் சொல்லவும், சிற்பமாய் செதுக்கவும் ஒரு மலையாள இயக்குனர்தான் வரவேண்டியிருக்கிறது. லேசான வெட்கத்தோடு சித்திக்கை பாராட்டலாம். இனிமேல் அவரை கோலிவுட்டின் கட்டாய பிரண்ட்(ஸ்) ஆக்கினாலும் தப்பில்லை.

ஆர்.எஸ்.அந்தணன்.

Subscribe to get more videos :