Wednesday, November 16, 2011

சிட்டிசன் - திரைப்பட விமர்சனம்


மூன்று மணிநேரமும் இன்னும் சில நிமிடங்களுமாய் ஓடுகிறது படம். இடையில் கொட்டாவிக்கு கெட் அவுட் சொன்னதற்காக இந்த யூனிட்டுக்கு சபாஷ் சொன்னாலும் குட்டு வைக்க வேண்டிய விஷயங்களே படத்தில் அதிகம். சின்ன வயதில் தன்னை தவிர ஊரையே கொன்று போடும் அந்த மூன்று அரசாங்க அதிகாரிகளையும் பழிவாங்க சிட்டிசன் அவதாரம் எடுக்கிறார் அஜீத். அவர்களை திட்டம் போட்டு கடத்துவதிலும் சரி, போலீசிடமிருந்து தப்பிப்பதிலும் சரி, ஊறுகாய் அளவிற்காவது விறுவிறுப்பு இருக்க வேண்டுமே.... ம்ஹ§ம்! எல்லாம் அம்புலிமாமா ஸ்டைல்!

திடீரென்று கலெக்டர் ஆபிசிற்குள் நுழைந்து தான் போட்டு வந்த கிழ மேக்கப்பை கலெக்டருக்கு போட்டு அவரை கடத்திவிட்டு கலெக்டர் மேக்கப்புடன் வெளியேறிவிடுகிறாராம் அஜீத். இதே ஸ்டைலில்தான் மற்ற இருவரையும் கடத்துகிறார். கடத்தல் கும்பல் கடத்தப்பட்ட நபருடன் எப்படி வெளியேறுகிறது? கடத்தப்பட்டவர்கள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்? அழிக்கப்பட்ட ஊரிலிருந்து தப்பிக்கும் அஜீத்தை தேடும் போலீஸ், அதே ஊரிலிருந்து தப்பித்த பாண்டியனை தேடாதது ஏன்? இப்படி, படம் துவங்குவதிலிருந்து முடியும்வரை நிறைய 'ஏன்'களை அள்ளி இறைத்திருக்கிறார் இயக்குனர். கையில் சின்ன துரும்புகூட இல்லாமல் மிஷின்கன் போலீஸ்களை அஜீத் பந்தாடுவது எம்.ஜி.ஆர் காலத்திலும் இல்லாத பூ!

விதவிதமாக மேக்கப் போட்டு வரும் அஜீத்துக்கு மீனவர் மேக்கப்பை தவிர, மற்றதெல்லாம் சுமார். சில கெட்டப்புகளில் அவர் முகத்தில் மைதா மாவை அப்பிய மாதிரி இருக்கிறது. திடீர் திடீரென்று அஜீத் மேல் காதல் வயப்படும் வசுந்தராதாஸ் இரண்டு மூன்று டூயட்டுகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். சி.பி.ஐ ஆபிசரான நக்மாவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க ஒரு வயசான நாயர்தான் கிடைத்தாரா? 'சி.பி.ஐ' என்ற மூன்றெழுத்தின் மிடுக்கையே நமத்துப்போக வைக்கிறார் அந்த நாயர்! அவ்வளவு விறுவிறுப்பாக தேடல் வேட்டையில் இறங்கிய நக்மா க்ளைமாக்சில் ஆப்செண்ட்!

''கிழக்கே உதிக்கும் சூரியனே''... வில் ''கப்பலேறிப் போயாச்சு''....மெட்டு.
சொல்ல வேண்டாம், இசை யாரென்று.

எல்லா அபத்தங்களையும் தள்ளிவிட்டு பார்த்தால் அந்த ஃபளாஷ்பேக், கண்களில் ரத்தம் வரவைக்கிறது. மீனவ பாஷையும், அழுக்கு தோலுமாய் அசத்தியிருக்கிறார் அஜீத். ஊருக்கு பாலம் கட்டாமலே பல கோடி தின்ற அதிகாரிகள் மேல் அவர் காட்டும் கோபமும் வெறுப்பும் இயல்பாக வெளிப்பட்டிருக்கிறது.

வெறும் காதல் நாயகன் என்ற வேலியை உடைத்தெறிந்துவிட்டு, சமுதாயப் பிரச்சனை பக்கமாய் தன் பார்வையை திருப்பியிருக்கிறார் அஜீத். தப்பு செய்பவர்களின் குடியுரிமையை பறிக்கணும் என்ற புதிய கோட்பாட்டை வலியுறுத்தும் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தரலாம்.

காஸ்ட்லியான சிட்டிசன் காரை, நல்ல டிரைவர் இல்லாமல் மரத்தில் மோதியிருக்கிறார் அஜீத். இதுபோன்ற டிரைவர்களின் கோடம்பாக்க குடியுரிமையை முதலில் பறிங்க. அப்புறம் கோடி கோடியா கொட்டி படமெடுங்க... பலனிருக்கும்

ஆர்.எஸ்.அந்தணன்.

Subscribe to get more videos :