Thursday, November 17, 2011

கில்லி - திரைப்பட விமர்சனம்

 
தெலுங்கு ஒக்கடுதான் தமிழில் கில்லி! மூலகர்த்தாவுக்கு முதல் வணக்கம். அதே நேரத்தில் தமிழுக்கு ஏற்றதுபோல் செதுக்கி, இதயத்துடிப்பை எகிற வைத்திருக்கும் இயக்குனர் தரணிக்கு டபுள் வணக்கம்! மின்னலாய் நகர்கிற திரைக்கதையில் இடைவேளை மட்டுமே ஸ்பீடு பிரேக்கர்!

கபடி விளையாட்டின் மேல் தீராத ஆர்வம் கொண்டுள்ள விஜய், மதுரைக்கு போகிறார் விளையாட. அங்கே.... த்ரிஷாவை துரத்திக் கொண்டு வருகிறார் பிரகாஷ்ராஜ். யதார்த்தமாக த்ரிஷாவை காப்பாற்றும் விஜய், பிரகாஷ் அண் கோஷ்டியினரிடம் மல்லுக்கு நிற்பதுதான் கதை! சீறி வரும் காளை போல் திமிறிக் கொண்டு ஓடுகிறது படம்!

கொடூரமான பிரகாஷ்ராஜை யாரென்றே தெரியாமல் ஒரு தட்டு தட்டிவிட்டு த்ரிஷாவோடு எஸ்கேப் ஆகும் விஜய், சென்னை வந்து சேர்வதற்குள் மூச்சிரைக்கிறது நமக்கு! அதுவும் அந்த சேஸிங் காட்சிகள் தமிழ் படங்கள் பார்த்திராத சாகசம்!

சுமார் ஆயிரம் பேர் வேல் கம்பு, வெட்டரிவாளோடு விஜயையும், த்ரிஷாவையும் சுற்றி வளைக்க, முடிந்தது கதை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் சாகசமாக தப்பிக்கிறாரே விஜய்.... லாஜிக் மீறாத அதிரடி ஆக்ஷன்! ஒவ்வொரு முறையும் விஜயின் பிடறிவரை துரத்தி வருவதும், நூலிழையில் அவரை தப்பவிடுவதுமாக பிரகாஷ்ராஜின் ருத்ரதாண்டவம் அற்புதமோ அற்புதம்! அத நீ சொல்லாத...., ஐ லவ் யூடா செல்லம்... இப்படி இரண்டே வார்த்தைகளை வைத்துக் கொண்டு பிரகாஷ்ராஜ் அடிக்கிற கொட்டம் இருக்கிறதே...! பாராட்ட வார்த்தையில்லை.

த்ரிஷாவுக்கும் விஜய்க்கும் இடையில் பூ பூக்கும் அந்த மெல்லிய உணர்வை அப்பட்டமாக சொல்லி ஆர்டினரி லவ் ஆக்கிவிடாத இயக்குனருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு.

எதிரிகளை எச்சரிக்கிறேன் பேர்வழி என்று தன் சுய கோபங்களை வெளிக்காட்டாத விஜய். ரசிகர்களுக்கு திரையின் ஓரத்தில் வந்து நின்று கொண்டு அட்வைஸ் பண்ணாத விஜய். துறுதுறுப்பான விஜய். இப்படி நிறைய விஜய்கள் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகிறார்கள்.

பயந்து பயந்து ஓடிய த்ரிஷா, தைரியமிருந்தா இவரை அடிச்சு போட்டுட்டு என்னை கூட்டிட்டு போ என்று சொல்கிற போது மிச்ச சொச்ச மூச்சையும் விசிலடித்தே தொலைத்து விடுகிறார்கள் ரசிகர்கள்.

நிஜமா? சினிமாவா? திகைக்க வைத்திருக்கிறார் ஆர்ட் டைரக்டர் மணிராஜ். அந்த லைட் ஹவுஸ் செட் ஒன்று போதும். இந்த வருடத்தின் பெஸ்ட் பட்டத்தை அவருக்கு வழங்க!

சண்டை பயிற்சி ராக்கி ராஜேஷ். முறுக்கிக் கொள்கிறது நரம்பு மண்டலங்கள் அத்தனையும்! அதை சுழன்று சுழன்று படம் பிடித்திருக்கிறார் கோபிநாத்!

இசை வித்யாசாகர். கேட்பவர்கள் துள்ள வேண்டும் என்ற முடிவோடு ஆர்மோனியத்தில் கை வைத்திருப்பார் போலும்!

கில்லி 'தரணி'யாள வைத்திருக்கிறது.

-ஆர்.எஸ்.அந்தணன்

Subscribe to get more videos :