Sunday, April 3, 2016

'ஒரே ஒரு பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை : பாடகர் ஜெகதீஷ்


ஒரே ஒரு பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை: பாடகர் ஜெகதீஷ்
மெல்லிய மனசுக்குச் சொந்தக்காரர் ஏ.ஆர் ரகுமான் சார்: சொல்கிறார் பாடகர் ஜெகதீஷ்

 ரகுமானுடன்  ரம்மியமான அனுபவங்கள் : சொல்கிறார் பாடகர் ஜெகதீஷ்


சினிமாவில் ஒரு திருப்பு முனை வாய்ப்புக்காகவே எல்லாரும் காத்திருப்பார்கள். அது வந்து விட்டால் அவர்கள் உயரத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கி விடுவார்கள்.

பின்னணிப் பாடகர் ஜெகதீஷ் ஏற்கெனவே பல பாடல்கள் பாடியிருந்தாலும் ராகவா லாரன்ஸின் தெறி ஹிட் படமான 'காஞ்சனா-2' படத்தில் பாடிய 'சில்லாட்டா பில்லாட்டா' பாடலுக்குப் பின் அவரைப் புகழ் வெளிச்சமும் புதுப்புது வாய்ப்புகளும் தேடி வர ஆரம்பித்தன. 'ஒரே ஒரு பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை' என்று இன்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

பாடகர் ஜெகதீஷ் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துவிட்டு அங்கேயே ஊடகக்கலை முதுகலையும்  முடித்துள்ளார்.

பிறகு ஏ.ஆர்.ரகுமானின் 'கே எம் காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி' கல்லூரியில் மேற்கத்திய இசை பயின்றுள்ளார்.

உங்கள் அறிமுகம் பற்றிச் சொல்லுங்கள் என்றால்,

" எனக்கு இந்துஸ்தானி கற்றுக் கொடுத்த குல்தீப் சாகர், தனுஸ்ரீ அம்மா, கர்நாடக இசை கற்றுக் கொடுத்த தகேசி மாஸ்டர், ஜெயலட்சுமி, சியாமளா  வெஸ்டர்ன் தியரி கற்றுக் கொடுத்த  ஆல்பர்ட் மாஸ்டர், ஆர்க்கெஸ்ட்ராவில் வளர்த்து விட்ட சித்தப்பா '' என்றுநீண்ட பட்டியல் வாசித்தவர், இவர்கள் இல்லாமல் தான் இல்லை என்கிறார் நன்றியுடன்.

இவர் வானொலியில் ரேடியோ ஜாக்கியாகவும் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாகவும் வேலை பார்த்திருக்கிறார். இதனால் பாடமட்டுமல்ல இவர் பேசவும் தெரிந்தவர். விளம்பரங்கள், ஜிங்கிள்ஸ், குறும்படங்கள் என நிறைய பாடியுள்ளார்.


இவர் உலகப்புகழ் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கல்லூரி மேற்கத்திய இசையின் பல்வேறு பரிமாணங்களை தனக்கு வெளிப்படுத்தி இசை ஞானத்தை விரிவாக்கியதாகக் கூறுகிறார்.

 ஏ.ஆர்.ரகுமானின் இசையில் கூட பாடியிருக்கிறார், பாடிக் கொண்டும் இருக்கிறார். இருந்தாலும் தனக்கு முதல் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் ஜீவன் மயில்,இன்று வளர்ந்து வரும் நிலையில் இருந்தாலும் மறக்காமல்அவரையும் குறிப்பிடுகிறார்.

'காஞ்சனா--2' படப் பாடல் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சென்றடைந்து இருப்பதாகக் கூறும் ஜெகதீஷ், ஸ்டுடியோ 1 ஸ்டார் ஐகான் சார்பில் சிறந்தபாடகர் விருதும் பெற்றுள்ளார். அதற்குள்ளாகவே எடிசன் விருதுக்கு சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், அனிருத் ஆகியோருடன் சிறந்தபாடகர் விருதுக்கான போட்டியில் இருந்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கூடத்தில் பயின்றது தனி உலகம் போன்ற  தனி அனுபவம் என்கிறார்.

'மிர்ச்சி அன் ப்ளக்டு' என்றொரு முயற்சியில் எலெக்ட்ரானிக் கருவிகள் இல்லாமல் எல்லாமே மேனுவலாக வாசிக் கப்பட்டு ரகுமான் இசையில் 'நறுமுகையே' பாடல் பாடி வீடியோ ஆல்பமாகியுள்ளது.. இது யூடியூப்பில் ஹிட் அடித்தது. ரேடியோ மிர்ச்சிக்காக இதை கேஎம் இசைக்கல்லூரி  கல்லூரி மாணவர்கள் செய்திருந்தனர். ரகுமான் இதில் தோன்றியிருப்பார்.

ரகுமான் மிகவும் அமைதியானவர் அதிகம் பேச மாட்டார். என்பார்கள். அவர் திறமை சாலிகளை ஊக்கப் படுத்த தவறுவதில்லை அவரது இசைக்கல்லூரி மாணவர்களைப்பாராட்டி ஊக்கப் படுத்துவார். வெகு ஜாலியான மெல்லிய மனசுக்குச் சொந்தக்காரர். ஜெகதீஷ் போட்டிருந்த 'டிஷர்ட்' வாசகத்தைப் படித்து விட்டுக்கூட பாராட்டியிருக்கிறாராம்.

ரகுமான் இசையில் நிறைய கோரஸ் பாடியிருக்கிறார். தனிக்குரலும் வெளிப்பட்டு உள்ளது. இப்படி 'கோச்சடையான்', 'ஐ' ,தமாஷா' இந்திப்படம் போன்ற பல அனுபவங்கள் உள்ளன ஜெகதீஷீக்கு. ''உலக இசை நாயகன் ரகுமானின் அருகில் இருந்து அவரது குழுவில் இருந்ததே பெருமை, பாக்யம். " என்கிற ஜெகதீஷ், ரகுமானின் 'கவாலி' இசைக் குழுவில் இடம் பெற்றுள்ளதை பூரிப்புடன் கூறுகிறார் இருபது பேர் கொண்ட அக்குழுவின் பல மதத்தினரும்  உள்ளது மத நல்லிணக்கத்துக்கு ஓர் உதாரணம் எனலாம். மசூதிகளில் இறைவணக்கம் பாடுவது இவர்களின் பணி.

ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தேவா, ஹாரிஸ் ஜெயராஜ்,ஸ்ரீகாந்த் தேவா, சி.சத்யா, என்.ஆர்.ரகுநந்தன்,  விஷால் சந்திரசேகர், அருணகிரி, சித்தார்த் விபின் வரை பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில் ஜெகதீஷ் பாடிவருகிறார்.

ஏப்ரல் 1ல் வெளியாகவிருக்கும்  'ஹலோ நான் பேய் பேசுறேன்' படத்தில் 'ஹலோ நான் பேய் பேசுறேன்'  என்கிற பாடலை விஷ்ணுப்பிரியாவுடன் இணைந்து பாடியுள்ளார். அதே படத்தில் நடிகர் விஜய்சேதுபதியுடன் 'மஜா ' பாடலை  இணைந்து பாடியதை மகிழ்ச்சியான அனுபவமாகக் கூறுகிறார்.

பாடகர் அனுபவம் பற்றிக் கூறும்போது "இப்போதுள்ள இசையமைப்பாளர்கள் எளிதில் வேலை வாங்குகிறார்கள். புதியவர்களை வளர்த்து விடுகிறார்கள் ஆர்வமும் முறையான பயிற்சியும் தொடர் முயற்சியும் இருந்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். " என்கிறார்.

ஜெகதீஷிடம் நம்பிக்கையுடன் நன்றியுணர்வும் உள்ளது. எனவே இவர் வளர்வதை இவருக்கு உதவியவர்களின் ஆசீர்வாதங்களே உறுதி செய்யும் எனலாம். வாழ்த்துக்கள்.!

Subscribe to get more videos :