கோ-என்ற பெரும் படையலையே பார்த்தாச்சே என்று அலட்சியமாக உள்ளே போனால், அதேபோன்றதொரு பத்திரிகை நிருபரின் கதையை அசுர வேகத்தில் படைத்து அசர வைத்திருக்கிறார் கரு.பழனியப்பன். ஒரு நிருபரின் வாழ்க்கையில் நடக்கும் மலைப்பு செய்திதான் இந்த படத்தின் அட்டை டூ அட்டை சமாச்சாரம்!
திசைகள் பத்திரிகையின் துடிப்பான நிருபர் ஸ்ரீகாந்த். இவர் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் வாசகர் மத்தியில் பரபரப்பையும் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்துபவை. இவரால் பாதிக்கப்பட்ட பலரும் முகத்திற்கருகே விரல் நீட்டி எச்சரிக்கிறார்கள். தம்பி ஒரு நாள் இதுக்காக நீ ஃபீல் பண்ணுவே... என்று. அந்த நாள் வெகு சீக்கிரம் வந்து தொலைக்கிறது நிருபருக்கு. ஆசையாக காதலிக்கும் சோனியா அகர்வாலை கண்ணெதிரே ஒரு கும்பல் கடத்திப் போகிறது.
பதறிப்போகும் அவர் சோனியா அகர்வாலை தேடி நடத்தும் நெடும் போராட்டமும் வேதனை ஓட்டமும்தான் கதை. நிருபர் வேலையை ஏதோ பகோடா கொறிப்பதை போல செய்யாமல் நிஜமான அக்கறையுடன் செய்யும் ஸ்ரீகாந்த் சிறைச்சாலைகளில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை புட்டு புட்டு வைக்கும் அந்த முதல் காட்சியே செம த்ரில். ஒரு சிகரெட், நிருபன் ஒருவனின் தன்னம்பிக்கையை, அலட்சியத்தை, திமிரை, என்னமாய் வெளிப்படுத்துகிறது?
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு லேசான புன்முறுவலோடு எதிராளியின் எச்சரிக்கையை அலட்சியம் செய்யும் ஸ்ரீகாந்த், அதே அலட்சியத்தை இறுதிவரை காட்ட முடியாதளவுக்கு யதார்த்த வலையில் சிக்கிக் கொள்வதை ஊசி செருகியதை போல உணர வைக்கிறார் டைரக்டர். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை இவ்வளவு அழகாக வெளிப்படுத்துவார் ஸ்ரீகாந்த் என்று யாருமே யூகித்திருக்கவும் போவதில்லை.
இவருக்கும் சோனியாவுக்குமான காதல் அழகான பூங்கொத்து. கரு.பழனியப்பனின் கதாநாயகிகள் வெறும் மரம் சுற்றிகள் அல்ல என்பதை சோனியாவும் நிரூபிக்கிறார். பேங்க்குக்கு பேனா இல்லாமல் வரும் ஸ்ரீகாந்திடம் நான் பேனா கொடுக்க மாட்டேன் என்று முகத்திற்கு நேரே கோபம் காட்டுவதும், அதற்காக அவர் தரும் விளக்கமும் ஆஹா. பீச்சில் வெகு நேர காத்திருப்புக்கு பின் எப்பவும் நான்தான் உனக்காக காத்திருக்கேன் என்று துவங்கி அவர் பேசும் அந்த டயலாக் மனசை பிசைகிறது. பின்னணி குரல் கொடுத்தவருக்கும் சேர்த்தே ஒரு பாராட்டு பத்திரம் தரலாம்.
பத்திரிகையாளனின் கதை. வசனங்களில் திரி பற்ற வைக்காமலிருந்தால் எப்படி? நாட்டு நடப்பை போட்டு வறுத்து எடுக்கிறார் கரு.பழனியப்பன். நீங்கள்ளாம் எலி ஜாதிடா என்று பத்திரிகையாளர்களையும் ஒரு பிடிபிடிப்பது ஆச்சர்யம். ரஜினி படத்தை வைச்சு அரசியல்னு போட்டு ஒரு கேள்விக்குறி போடு என்பதில் இருக்கிற ஹாஸ்யம், எந்த காலத்திலும் தொடரும் என்ற அவரது நம்பிக்கையை என்னவென்று சொல்ல?
முதல் பாதியில் கேரக்டர்களை உள்வாங்கும் கேமிரா, இரண்டாம் பாதியில் தானும் ஒரு கேரக்டராக ஓடுவது அபார யுக்தி. (முழுக்க முழுக்க ஸ்டடிகேம் பயன்படுத்தியிருக்கிறார்கள்) ஒளிப்பதிவாளரோ, இயக்குனரோ, அல்லது இருவருமோ? பிடியுங்கள் பாராட்டுகளை.
வித்தியாசாகரின் இசையில் விழியும் விழியும் பாடலும் படமாக்கிய விதமும் அற்புதம். அந்த குத்துப்பாட்டுதான் சரியான வெத்து வேட்டு.
படம் துவங்கி க்ளைமாக்ஸ் வரைக்கும் தன்னுடைய வித்தியாசங்களை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்த இயக்குனர், க்ளைமாக்சில் படு பயங்கரமாக சறுக்கியிருப்பதுதான் ஆச்சர்யம். எல்லா படங்களிலும் பார்த்து பழகிய அதே மசாலா. ஏன் சார்?
எது எப்படியோ? சதுரங்கம்- கட்டங்களை தாண்டிய முரட்டுக் கவிதை!
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா இணைய தளம்