பாராட்டுக்கள், விமர்சனங்கள் என இரண்டு பக்கங்களையும் சந்தித்துவிட்டது ‘7ஆம் அறிவு’. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சூர்யா. எவ்வளவு கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க என்று தயாரான சூர்யா, அதற்கு முன்பாக பத்து நிமிடம் இடைவெளி இல்லாமல் பேசியதிலிருந்து…..
“மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு இரண்டையுமே மதிக்கிறேன். 7ஆம் அறிவுக்கு கொடுத்துள்ள விமர்சனங்களை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். நான் நடிக்க வந்து 13 வருஷமாச்சு. முதல் படம் பண்ணும்போது, “எனக்குன்னு ஒரு மார்க்கெட், பிஸினெஸ் இருக்கும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டிப்பிடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. சினிமா துறையில் பெரிய லெஜண்டாக இருக்கும் ஒருவர் படம் பார்த்துவிட்டு “இந்த படம் பற்றி ஏன் இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் நானும் மற்றவர்கள் சொன்னதை கேட்டு படம் எப்படி இருக்குமோ என்றுதான் நினைத்தேன். என் பையன்தான் படத்திற்கு அழைச்சிட்டு போனான். ரொம்ப பிரமாதம்” என்று பாராட்டினார்” என்ற சூர்யா, கேள்விகளுக்கு தயாரானார்.
நீங்க தியேட்டருக்கு போய் படம் பார்த்தீங்களா?
“இன்னும் இல்லீங்க. இத்தனை வருடம் ஆன பிறகும் தியேட்டரில் முதல் நாளில் ஆடியன்சுடன் சேர்ந்து படம் பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஒரு படம் முடிந்த பிறகு எனக்குள்ளே இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமோ என்ற தாழ்வு மனப்பான்மைதான் வரும்.”
உங்க படத்தை விஜய் பார்த்தாரா? விஜய் படத்தை நீங்க பார்த்தீங்களா?
“அவரு பார்த்தாரான்னு தெரியல. ஆனா விஜய் மிஸ்ஸஸ் பார்த்துட்டாங்க. ஜோதான் அவங்களுக்கு டிக்கெட் எடுத்துகொடுத்து எல்லோரும் ஒண்ணா சேர்ந்து படம் பார்த்திருக்காங்க. படம் பார்த்துட்டு ஒரு படத்துல இவ்வளவு உழைப்பான்னு சொல்லியிருக்காங்க. வேலாயுதம் படத்தை நான் இன்னும் பார்க்கல. ஆனா இரண்டு படமும் நல்லா போவதை நினைத்தால் சந்தோஷமா இருக்கு”
ரஜினி படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?
“தியேட்டரிலிருந்து வெளியே வந்ததும், தோளில் கை போட்டு பாராட்டிவிட்டு வேகமா நடந்து போய் காரில் ஏறி கிளம்பினார். கமல் சார் படம் பார்க்கும்போது நான் ஊர்ல இல்ல. “பையன் நல்ல ஃபார்ம்ல இருக்கான்ல” என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். இப்போ நான் பெசண்ட் நகரில் வீடு கட்டி போயிட்டேன். வாரத்துல இரண்டு நாள் தி.நகர் வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவோட சாப்பிடுவிட்டு போவோம். அப்பா படம் பார்த்துட்டு பெசண்ட் நகர் வீட்டுக்கு நேரா வந்துட்டார். என்னை பாராட்டியபோது அவர் கண் கலங்கினார். எனது இத்தனை வருட கேரியரில் அவர் என்னை கண்கலங்கி பாராட்டியது இதுதான் முதல் முறை.”
அடுத்து?
“கே.வி.ஆனந்த் சாருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்றேன். 7ஆம் அறிவைவிட ஒருபடி மேலான படமாக இருக்கும். எனக்கு தெரிந்து அதுபோன்ற ஒரு பாத்திரத்தில் இதுவரை யாரும் நடித்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்”