வெள்ளம் உறங்கிக் கிடந்த மனித நேயங்களை தட்டியெழுப்பி உதவிக் கரங்களை நீளச் செய்திருக்கிறது. சென்னையை சில நாட்களே மிதக்க வைத்தது வெள்ளம். ஆனால், பல உள்ளங்கள் செய்து வரும் உதவிகள் மாதக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. அவரவர் முடிந்தவரை உதவி செய்து கொண்டிருக்கும் நேரத்தில் சொந்தப்படம் எடுத்து துவண்டு கிடந்த காமெடி நடிகர் கஞ்சா கருப்புவும் தற்போது உதவி வருகிறார். வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான சென்னை எம்.ஜி.ஆர் நகர் சூளப்பள்ளம் பகுதியில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்காக உடனடியாக ஒரு உணவகத்தை ஆரம்பித்திருக்கிறார் கஞ்சா கருப்பு.
ஹோட்டலை வைச்சு வியாபாரம் நடத்தலாம் ஆனால், எந்த வகையில உதவுவீங்க? எனக் கேட்டால், அண்ணே எப்படியாவது உதவியே ஆகணும்னு மனசு கிடந்து துடிச்சுது. எனக்கு இதவிட்டா வேற வழி தெரியல. சென்னையே முழுசா முழுங்கினப்போ நான் இங்கயில்ல. சொந்த ஊருக்கு போயிருந்தேன். சென்னையில இருக்குற என்னோட வீட்டுக்குள்ளேயும் தண்ணி புகுந்துடுச்சி. அதுல பல விலை உயர்ந்த பொருட்களையெல்லாம் வீணாப்போச்சு. வெள்ளத்துல பாதிக்கப்பட்ட மக்களோட கஷ்டத்தையும் கேள்விப்பட்டேன். ஆனா, என்னால உடனே கிளம்பி சென்னைக்கு வர முடியவில்லைண்ணே.
கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் இங்கே வந்தேன் வந்த பின்னாலதான் மழை மக்களை எப்படியெல்லம் கஷ்டப்படுத்திட்டு போயிருக்குன்னு முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். நான் நல்லா இருந்தப்போ எத்தனையோ பேருக்கு நிறைய உதவிகளை செஞ்சிருக்கேன் இருந்தாலும் என்ன செய்றது. இப்ப நம்ம நிலைமை அப்படி லட்சக்கணக்குல கொடுக்குற அளவுக்கு இல்லை. ஆனா, எப்படியாச்சும் உதவனும்னு மனசு துடிச்சிட்டுருந்தது. ஆனா ஒரு நாள் மட்டும் பயன்படுற வகையில் இல்லாம பாதிக்கப்பட்ட மக்களோட நிலைமை ஓரளவுக்கு சரியாகும்வரை நம்மால முடிஞ்சத செய்யணும்னு நெனைச்சேன். அப்போதான் ஏழை மக்கள் சாப்புடுற மாதிரி ஒரு ஹோடல் திறந்து அந்த பகுதியில் இருக்குற கஷ்டப்படுற மக்களுக்கு இலவசமாகவும், மத்தவங்களுக்கு பாதி விலையிலும் கொடுக்குற ஐடியாவில் இந்த ஹோட்டலை ஆரம்பிச்சேன். சினிமாவுக்கு முன்னால நம்ம தொழில் இதுதாண்ணே. அதனாலதான் நமக்கு தெரிஞ்ச தொழில் வழியில் உதவலாம்னு இந்த கடையை திறந்திருக்கேன். இப்போதான் திரும்பவும் சில பட வாய்ப்புகள் வருது. பட சூட்டிங் இல்லேண்ணா நானே இந்த கடையில வேலை செஞ்சு மக்களுக்கு பரிமாறுறேன். இல்லேண்ணா என்னோட பல வருட நண்பனும் ஓட்டல் தொழிலில் அனுபவத்துல அதிகமிருக்குறவருமான ஜெயம் கொண்டான் கவனிச்சுக்கிறார். அவருக்கும் உதவுற குணம் அதிகம். அதனால மக்களுக்கு சேவை செய்யுற விதத்துல ஆரம்பிச்சிருக்குற நோக்கம் சிறப்பாக இருக்கும். கண்ணுமுன்னால கஷ்டப்படுறவங்களுக்கு பெரிய வசதி செய்து கொடுக்க முடியலைன்னாலும், அவங்க வயிறு காய்ஞ்சுடக்கூடாதுண்ணே. அப்படி நடத்துடுச்சுன்னா அவங்க பட்டினிகிடந்து வாழுவ காலத்துல நாம நல்லா வாழுறதுல என்ன அர்த்தம் இருக்கப்போவுது சொல்லுங்க..? என்கிறார் கஞ்சா கருப்பு பரோட்டாவை வீசியபடி..!
வஞ்சமில்லா வார்த்தைகளில் பேசும் கஞ்சமில்லா கருப்புவின் வெள்ளை மனசு அந்த உணவகத்தில் கமகமக்கிறது.