விஜய்யும்- அஜித்தும் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கும், நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கும் வருவார்களா..?
இந்தக் கேள்விக்கான பதில் தான் விஜய்- அஜித் தரப்பிலிருந்து என்னவாக வருமென்று இரண்டு காதுகளையும் அகல விரித்து வைத்து ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்! நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதும் தங்களது வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அதில் முக்கியமான வாக்குறுதி நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது.
இடத்தை மீட்டு விட்டாலும், அதில் கட்டிடம் கட்டுவதற்கு பெரு நிதி தேவைப்படுவதால் சென்னையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்த தயாராகி வருகிறார்கள். வருகிற 20-ம் தேதி பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட இருக்கின்றன. அதற்கு காரணம் எல்லா சங்க உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நல்ல எண்ணம் தான்.
பொதுக்குழு, அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் இரண்டு நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் கலந்து கொள்வார்கள் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் விஜய் – அஜித் இருவரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு வருவார்களா? இல்லையா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
விஜய் கூட அவ்வப்போது வெளியில் தலை காட்டுகிறார். அதனால் அவர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கிறார்கள். ஆனால் திரையுலகின் சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்த அஜித் நடிகர் சங்கத்தின் மேற்கண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது சாத்தியமே இல்லை என்பது தான் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தரும் உறுதியான செய்தி.
அஜித்தைப் பொருத்தவரை தன் மனசுக்குப் பிடித்தால் மட்டுமே ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அதைத்தாண்டி கடவுளே வந்து கூப்பிட்டாலும் எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். பொதுவாக திரையுலகம் சார்பில் நடக்கும் எந்த விழாவையும் அஜித் கண்டுகொள்வதே இல்லை. அப்படித்தான் மேற்கண்ட இரு நிகழ்ச்சிக்கும் அவரது மனசில் இடம் இல்லை போலிருக்கிறது.
அதையும் மீறி இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்வார் என்று என்று எதிர்பார்த்தால், அது நடிகர் சங்க நிர்வாகிகளின் கானல் நீர் கனவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். அஜித்தின் முடிவு இப்படிப்பட்டதாக இருந்தால் நடிகர் சங்கத்தின் முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும்?
அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- Srinath Kalasal