Tuesday, November 8, 2011

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - விமர்சனம்


திரும்பும் இடங்களில் எல்லாம் அழகை அறுவடை செய்யும் கேமிரா. முடிந்தவரைக்கும் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள். பின்னணியில் இசையை குழைத்துக் கொடுக்கும் ரஹ்மான் என்று பொருத்தமாய் செய்யப்பட்டிருக்கிற படம். ஆனால் படத்தின் நீ............ளம் காரணமாய் அவ்வப்போது எழும் கொட்டாவியை நிறுத்த முடியவில்லை.

பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு காரணத்தால் விபத்திற்குள்ளாக, ராசியில்லாத பெண் என்று முத்திரை குத்தப்படுகிறார் தபு! தனக்கென்று ஓரு ராஜகுமாரனை கற்பனையில் வளர்த்துக் கொண்டு அவனுக்காக காத்திருக்கிறார் ஐஸ்வர்யா! இரண்டு பேர்களின் எதிர்பார்ப்பும், காதலும் என்னாயிற்று? என்பது கதை. ஷ§ட்டிங்கிற்கு வீடு பார்க்க வரும் அஸிஸ்டெண்ட் டைரக்டர் அஜீத்தை தன்னை பெண்பார்க்க வந்தவர் என்று தபு ஏமாறுவதும், முதல் பார்வையிலேயே மனதை பறி கொடுக்கும் அஜீத் தபுவை விரட்டி விரட்டி சம்மதம் வாங்குவதும் கவிதையாய் சொல்லப்பட்டிருக்கிறதென்றால், இரண்டு பேரும் சந்திக்கும் அந்த காட்சி பயங்கர சிரிப்பு.

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யாவின் காதல். தன்னை போலவே பாரதியை விரும்பும் காதலன் அப்பாஸ் கிடைத்ததும் கவிதையும் காதலுமாய் பின்னி பிணைகிறார். ஆனாலும் இந்த காதல் நீடிக்க போவதில்லை என்பது ஆரம்பத்திலேயே உணரமுடிகிறது. அப்பாசுக்கு திருமணம் ஆகிவிட்டது தெரிந்ததும் அந்த துள்ளல் மறைந்து ஒரு சோகத்தை அப்பிக் கொள்கிறாரே....அந்த காட்சியில் அவர் வெறும் பொம்மை மட்டுமல்ல... நடிகையும்தான் என்று உணர்த்துகிறார். மிலிட்டிரி மேஜர் மம்முட்டியின் வசனத்தில் நகைச்சுவையையும் தாண்டி கோபம் வெடிக்கிறது சில இடங்களில். மரணத்தைவிட மறக்கப்படுவதுதான் கொடுமை. வன்னி காட்டில் சண்டை போட்டுட்டு கால் உடைஞ்சப்ப கூட எனக்கு வருத்தம் இல்ல. ஆனா சென்னை துறைமுகத்தில வந்து இறங்கினப்போ ஒருத்தரும் வரவேற்க வராதப்பதான் இதெல்லாம் யாருக்காகன்னு தோணுது.... -வசனம் சுஜாதா.

வன்னி சண்டை யாருக்காக நடந்தது என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். புலிகளின் ஆதரவாளர் படத்தில் புலிகளுக்கு எதிரானவர்களுக்கு வக்காலத்து வாங்கும் வசனம்! மற்றபடி, ஐஸ்வர்யாவை காதலிக்க முயற்சிக்கும் இடத்திலெல்லாம் அப்பாஸ் வந்து நிற்பதும், மம்முட்டி சற்றே எரிச்சலோடு ஜகா வாங்குவதும், அழகான காமெடி! உயி... உயி.... என்ற பாதி வார்த்தையை மட்டுமே உச்சரித்து கொண்டு படுக்கையில் கிடக்கும் அந்த கிழவர் மனதிலேயே நிற்கிறார். வடையின் ருசியை வைத்தே ஸ்ரீவித்யாவை கண்டு பிடிக்கிறார்களாம் மம்முட்டியும், மணிவண்ணனும்! யூ டூ ராஜீவ்மேனன்? பாடல்கள் எல்லாமே சித்திரை மாதத்தின் குற்றால சாரல்! ஆனால் ஐப்பசி மாதத்து அடை மழை மாதிரி அடிக்கடி வந்து எரிச்சல் மூட்டுகிறது.

கண்டுகொண்டேன்.... நொந்துகொண்டேன் என்கிற மாதிரி இல்லை!

ஆர்.எஸ்.அந்தணன்.

Subscribe to get more videos :