'காதல் காதல்' என்று ஆயிரத்தெட்டு முறை பேப்பரில் எழுதி, அதையே வாயில் போட்டு மென்று செரித்திருப்பார் போலிருக்கிறது. அப்படியொரு மூடுடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன். பெரிய ட்விஸ்ட் இல்லை. பரபரக்கும் திரைக்கதை இல்லை. ஆனால் மொத்த தியேட்டரையும் கைதட்ட வைக்கிறார். விசிலடிக்க வைக்கிறார் இந்த பொல்லாத மோடி மஸ்தான்.
காதல் தோல்வி படங்களை காட்டி ரசிகர்களையும் இருமி இருமியே சாகிற அளவுக்கு படுத்துவதுதான் தமிழ்சினிமாவின் ஹிஸ்ட்டரி. முதன்முறையாக ஒரு காதல் தோல்வி படம் ஜாலியாக நகர்கிறது. அதுவே சென்ட்டிமென்ட் தலையில் விழுந்த இரும்பு சுத்தியல். வலுவாக 'போட்ட' பாலாஜிக்கு மறுபடியும் ஒரு பாராட்டு. (கிளிஞ்சல்கள் படத்தில் பூர்ணிமா ஜெயராம் காதல் தோல்வியால் தன் உள்ளங்கையில் ஆணியடித்துக் கொள்கிற காட்சியை இந்த இடத்தில் நினைத்துக் கொள்ளுங்கள் வாசகர்களே)
ஆச்சர்யம் நம்பர் இன்னொன்று. இப்படத்தில் அமலா பால் நடிப்பையும் தோற்றத்தையும் நமக்கு பிடித்திருப்பதுதான். கதை என்று எடுத்துக் கொண்டால் பெரிசாக சொல்லிவிட முடியாது. எந்நேரமும் ஈகோவினால் அடித்துக் கொள்ளும் காதல் ஜோடி அமலாவும் சித்தார்த்தும். இவர்களுக்குள் ஏற்படும் பிரிவும் சின்ன சின்ன கோழி சண்டைகளும்தான். அது எந்த இடத்தில் நொறுங்குகிறது. எப்படி மீண்டும் சேர்கிறார்கள் என்பதுதான் க்ளைமாக்ஸ்.
சாம்பிராணி வாசனை போதாது என்று அதில் சென்ட்டையும் தெளித்த மாதிரி அற்புதமான இன்னொரு லவ்வையும் காட்டுகிறார் பாலாஜி. அமலாவின் அப்பா சுரேஷுக்கும் அம்மா சுரேகா வாணிக்கும் இடையே ஏற்படும் பிரிவும் கூடலும் அப்படியொரு சுவாரஸ்யம். பிள்ளைகளை பற்றி கவலைப்படாத பெற்றோர்கள் இந்த படத்தை ஒருமுறை பார்ப்பது ரொம்பவே நல்லது.
மேலும் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் : http://bit.ly/zbso9S