'இன்கம்டாக்சுக்கு கொண்டு போய் கொட்டினாலும் கொட்டுவேன், ஈகை விஷயத்தில் அடியேன்கருமி' என்று மார்தட்டுகிற சிலபல ஹீரோக்களுக்கு மத்தியில் சூர்யாவின் செயல்பாடுகள் வியப்போ வியப்பு. ஒரு வீட்டில் ஒரு மாணவன் படித்தால் கூட போதும். ஒரு தலைமுறைக்கே வெளிச்சமடிக்கும். இதை நன்கு புரிந்து வைத்திருக்கும் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
சில பள்ளிக்கூடங்களும் இவரது பெருந்தன்மையால் சிக்கலில்லாமல் இயங்கி வருகிறது. இதையெல்லாம் நேரில் கொண்டு போய் காட்டினாராம் ஹன்சிகா மோத்வானிக்கு. ஏன்? கொடுக்கிற விஷயத்தில் ஹன்சிகாவுக்கு சூர்யாவுக்கும் கிட்டதட்ட ஒரே மனசு! தனது 21 வயதில் 21 அநாதை குழந்தைகளை தத்தெடுத்திருக்கிறார் ஹன்சிகா. அதோடு நிறுத்தாதே... முடிந்தவரை ஏழைகளுக்கு கல்வி கொடு என்பதை உணர்த்ததான் ஹன்சிகாவை தனது அகரம் பவுண்டேஷன் கீழே இயங்கும் பள்ளிகளுக்கு அழைத்துப் போனாராம் சூர்யா.
உருகிப்போன ஹன்சிகா, இதே மாதிரி ஒரு அகரம் அமைப்பை மும்பையில் தொடங்குவேன் என்று கூறியிருக்கிறாராம் சூர்யாவிடம். அதற்கான ஆரம்பகட்ட முயற்சியிலும் இறங்கியிருக்கிறார். ஹன்சிகாவின் ஸ்கூலுக்கு இங்கிருந்து சூர்யா சீஃப் கெஸ்ட்டாக போகிற நாளும் சீக்கிரம் வரும்போல தெரிகிறது.