Thursday, March 31, 2016

கா விடுகிறார் டார்லிங்!



ஃப்ரெஷ்ஷாக பனியில் மனைந்த காட்டுமலர் மாதிரி இருக்கிறார் மாயா. ‘டார்லிங்-2’, ‘உன்னோடு கா’ படங்களின் ஹீரோயின். ‘ஈ’யென்று பல்லைக் காட்டுபவர்களிடம், “சொத்தை விழுந்திருக்கு. உடனே ட்ரீட் பண்ணணும்” என்கிறார். யெஸ், அம்மணி பல் டாக்டராம். ரொம்ப பல்லைக் காட்டினால், கழட்டி கையில் கொடுத்துவிடுவார் என்கிற எச்சரிக்கை உணர்வுடனேயே பேசினோம்.

“சொந்த ஊரு?”
“திருச்சி. அப்பா டாக்டர். தி.நகரில் க்ளினிக் வெச்சிருக்காரு. சென்னையில் பல் டாக்டருக்கு படிச்சேன். அப்போதான் ‘டார்லிங்-2’ வாய்ப்பு கிடைச்சது.”

“சினிமா பிடிச்சிருக்கா?”
“பிடிச்சிருக்கறதாலேதானே நடிக்கிறேன்? ‘டார்லிங்-2’ ஷூட்டிங் ஊட்டியில் ‘அன்பே வா’ நடந்த பங்களாவில் நடந்துச்சி. அதுக்கு கீழே இருக்குற கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம். நைட்டுலே சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகம். பகலில் கூட மான், காட்டெருமைன்னு கூட்டமா திரியும். ஏதாவது வனவிலங்கு போட்டுத் தாக்கிடுமோன்னு பயந்துக்கிட்டேதான் நடிச்சேன். த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ். முஸ்லீம் பொண்ணு கேரக்டர். க்ரைம் த்ரில்லர். முதல் படம் ரிலீஸ் ஆகுறதுக்குள்ளே அடுத்த படம் புக் ஆயிடிச்சி. செம டைட்டில். ‘உன்னோடு கா’. ஆக்டிங் கேரியரும் இன்டரெஸ்டிங்காதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.”

“சொந்தக்குரலில்தான் பேசுறீங்களாமே?”
“ஆமாம். நான் தமிழ்ப்பொண்ணுதானே? எனக்கு எதுக்கு டப்பிங்? அதுவுமில்லாமே என்னோட வாய்ஸ் நல்லா இருக்கும். காலேஜ் கல்ச்சுரல்ஸில் பாட்டெல்லாம் பாடியிருக்கேன். சினிமாவில் பாட சான்ஸ் கிடைச்சாலும் பட்டையைக் கிளப்பிடுவேன்.”

“ஃப்யூச்சர்?”
“ரெண்டு வருஷம் நடிப்பேன். அதுக்கப்புறம் சொந்தமா டென்டல் க்ளினிக். இருபத்தேழு வயசுலே கல்யாணம் பண்ணிப்பேன். என் கேரக்டருக்கு எழுத்தாளர் அல்லது கவிஞர் யாராவது செட் ஆவாங்கன்னு நெனைக்கிறேன்.”

“பத்திரிகையாளர்கள் மட்டும் என்ன பாவம் பண்ணாங்க மாயா?”
“கெளம்புங்க சார். காத்து வரட்டும்.” ஆகவே, எழுத்தாளர்களே, கவிஞர்களே... மாயாவின் சுயம்வரத்துக்கு சுறுசுறுப்பா ரெடி ஆகுங்க!

Subscribe to get more videos :