ஆடு, மாடு, யானை, பாம்பு, கோழி, கழுதை, நாய், குதிரை, ஈ என்று எத்தனையோ விலங்குகள் ஹீரோவாகி விட்டன. பன்றி என்ன பாவம் செய்தது? அறிமுக இயக்குநர் ஜெகன் சாய் இயக்கும் ‘ஜெட்லீ’ படத்தில் டைட்டில் ரோலில் நடிப்பது ஒரு பன்றியாம். அவரும் படத்தில் நடிக்கிறார்.
“முதல் படமே ஆக்ஷனா?”
“பால் வடியும் என் முகத்தை பார்த்துட்டு எப்படிங்க இப்படி கேள்வி கேட்குறீங்க? நான் ஃபைட் பண்ணி விஜய், அஜீத், சூர்யான்னு ஆக்ஷன் ஹீரோஸ் பேர கெடுக்கணுமா? இந்தப் படத்தோட கதை தலைப்பிலேயே இருக்கு. படம் பார்த்ததும் உங்களுக்கு புரியும். செல்ஃபீ புள்ள கிட்டே கூட மூடநம்பிக்கை இருக்கிறதுதான் நம்ம நாட்டோட கரன்ட் ஸ்டேட்டஸ். அதை சுட்டிக்காட்டுற முயற்சிதான் இந்தப் படம். ஜெட்லீ என்கிற பன்றிக்குட்டியை வைத்து மக்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரண்டு இளைஞர்கள் எப்படி பிழைக்கிறார்கள்னு காமெடியா சொல்லியிருக்கோம். சகுனங்களை மக்கள் எப்படி சீரியஸா எடுத்துக்கிறாங்க, கையாளுறாங்கங்கிறதை யதார்த்தமா எடுத்துக் காட்டியிருக்கோம்.”
“டூ ஹீரோயின்ஸ். பட், நோ டூயட். ஒய்?”
“இந்தப் படத்துலே ஹீரோ, ஹீரோயின்னு யாரையும் குறிப்பிட்டெல்லாம் சொல்ல முடியாது. எல்லாரும் பாத்திரங்கள். அவ்வளவே. ரெண்டு டுபாக்கூர்களைப் பத்தின கதை. ஒண்ணு நான். இன்னொண்ணு கவுதம் மேனனோட அசிஸ்டென்டான கண்ணன் பொன்னையா. ‘என்னை அறிந்தால்’, ‘உத்தம வில்லன்’ படங்களில் நடிச்ச பார்வதி நாயர், விஜய் ஆண்டனியோட ‘சைத்தான்’ பண்ணிகிட்டிருக்கிற அருந்ததி நாயரும் நடிக்கிறாங்க. நாங்க ஜோடியெல்லாம் கிடையாது. அவங்க ரெண்டு பேருக்கும் கூட எங்களை மாதிரி லீட் ரோல்தான்.”
“டைரக்டா டைரக்டர் ஆயிட்டீங்களாமே? யார் கிட்டேயும் தொழில் கத்துக்கலைன்னு சொல்றாங்க?”
“கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி பரணிதரன்னு குறும்பட மன்னர்கள்தான் எனக்கு ரோல் மாடல். நான் யார்கிட்டேயும் வேலை பார்த்ததில்லை என்பது உண்மைதான். ஆனா படப்பிடிப்பை எப்படி நடத்தணும்னு நல்லா கத்துக்கிட்டுதான் கிளாப் போர்டை கையில் எடுத்திருக்கேன். இந்தப் படத்துக்கு ஸ்க்ரிப்ட் ஒர்க்கே ஒரு வருஷம் ஆச்சி. நல்லா செதுக்கி, செதுக்கி உருவாக்கியிருக்கேன். அனுபவம் இல்லைன்னாலும், என்னோட வேலையில் பர்ஃபெக்ஷன் கொஞ்சமும் குறையாது. படம் பார்த்தா நீங்களே புரிஞ்சுப்பீங்க.”
“நடிப்பு, இயக்கம்னு ரெட்டைக் குதிரை சவாரி தேவைதானா?”
“அது ஒண்ணும் அவ்வளவு கஷ்டமில்லை. நான் டைரக்ட் பண்ணுற சீனில் நான் இருக்க மாட்டேன். நான் நடிக்கிற சீனை என்னோட அசோசியேட் பார்த்துப்பார். மானிட்டர் பார்த்துட்டு ஓக்கே பண்ணிடலாம். நடிப்பா, இயக்கமான்னு கேட்டா என்னோட முதல் சாய்ஸ் இயக்கம்தான். என் நண்பர்கள் வற்புறுத்தியதால்தான் நானும் நடிச்சேன். பட்ஜெட்டும் குறையுதுங்கிறது இன்னொரு ப்ளஸ். ரெண்டு வேலையையுமே ஹேப்பியாதான் செய்யுறேன்.”
“டெக்னிக்கல் டீம்?”
“சத்யா மியூசிக் பண்ணுறாரு. அதுவே எங்களுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி. இப்போலாம் ஒரு படத்துலே ஒரு பாட்டு ஹிட்டாகறதே பெரிய விஷயம். ஆனா, சத்யா மியூசிக் போட்ட படங்களில் எல்லாம் எல்லா பாட்டுமே சொல்லி அடிச்ச கில்லி. இந்தப் படத்துலே இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கோ அதே அளவுக்கு கிராபிக்ஸ் சீன்களுக்கும். ஏன்னா, எங்களோட ஆடியன்ஸ் குழந்தைகள்தான். அவங்களை சேடிஸ்ஃபை பண்ணுறது எங்களுக்கு முக்கியம். இந்தப் படத்தோட அனிமேட்டர்கள் ‘நார்நியா’, ‘லயன்’ மாதிரி ஹாலிவுட் படங்கள் பண்ணவங்க. அந்த குவாலிட்டியை தமிழுக்கும் கொண்டுவர்றாங்க.”

