Thursday, March 17, 2016

நயன்தாராவின் வாய்ப்புகளை பறிக்கிறேனா?: நடிகை அஞ்சலி பேட்டி


தொடர் சர்ச்சைகள், தலைமறைவு வாழ்க்கை என பரபரப்பு வட்டத்துக்குள்ளிலிருந்து முழுமையாக வெளிவந்திருக்கிறார் அஞ்சலி. இப்போது எந்த துணையும் இல்லாமல் கேள்விகளை எதிர்கொள்ளும் அஞ்சலிக்கு “பேரன்பு’, “இறைவி’, “தரமணி’, “காண்பது பொய்’ என தமிழ் சினிமாவின் அடுத்தடுத்த எதிர்பார்ப்புக்குரிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

கதைகளுக்கான அடையாளம் போய் கமர்ஷியல், கிளாமர் என சமீபமாக உங்களைப் பார்க்க முடிகிறது… ஒரு சின்ன இடைவெளியில் நிறைய மாற்றங்கள்…?

“கற்றது தமிழ்’, “அங்காடித் தெரு’, “எங்கேயும் எப்போதும்’ என ஒவ்வொரு படத்திலும் ஒரு வித்தியாசம் இருந்தது. இந்த வேடத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என ஒவ்வொரு இயக்குநரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதைப் போலவே என்னால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்க முடியாது. அறிமுகமான காலங்களில் எனக்குள் இருந்த சினிமா புரிதலுக்கும், இப்போதுள்ள புரிதலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை நானே உணர்கிறேன். சின்ன இடைவெளிக்குப் பின் வந்து நடித்த “சகலகலா வல்லவன்’, இப்போது வந்துள்ள “மாப்ள சிங்கம்’ படங்கள் கமர்ஷியல் ரகங்கள்தான். ஆனால் யாரும் நடிக்காத வேடங்கள் இல்லை. இது நானே திட்டமிட்ட ஒன்றுதான். கடந்து போன விஷயங்களை பேசி இப்போது பயன் இல்லை. ஒரு சின்ன இடைவெளியில் நான் கற்று கொண்டதும், புரிந்துக் கொண்டதும் நிறைய. அதற்கு யார் மீதும் பழி சொல்ல முடியாது. இப்போது என்னிடம் கோரிக்கைகளும் இல்லை. நிபந்தனைகளும் இல்லை. ஒரே மாதிரியான முத்திரை வேண்டாம் என்பது எல்லோருக்குமான திட்டம்தான். இப்போது அடுத்து நான் தேர்வு செய்து நடிக்கிற “இறைவி’, “பேரன்பு’, “தரமணி’, “காண்பது பொய்’ என ஒவ்வொரு படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். பவர் ஃபுல், க்யூட், கிளாமர் என எல்லாம் கலந்து இருக்கும்.

தெலுங்கு சினிமாக்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள்…?

தெலுங்கு சினிமாதான் என் முதல் அடையாளம். தமிழில் அடுத்தடுத்த கவனம் கலைக்கிற வேடங்களில் நடித்து வந்த போதுதான், சில பிரச்னைகள் உருவானது. அதன் பின் நான் முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பொதுவாக தெலுங்கு என்றாலே அங்கே கமர்ஷியல் சினிமாக்களுக்குதான் முன்னுரிமை கொடுக்கப்படும். அதையும் மீறி நல்ல கதைகளில் தயங்காமல் நடித்தேன். அதன் பலனாக அடுத்தடுத்து வெற்றிகளும் தேடி வந்தன. முழுக்க முழுக்க பெண்களை முன்நிறுத்தும் கதாபாத்திரங்களை தெலுங்கு ரசிகர்கள் ஏற்பதில்லை. அதை உடைக்கும் விதமாக “கீதாஞ்சலி’, “சித்தரங்கா’ என அடுத்தடுத்து தேர்வு செய்து நடித்தேன். இதற்கு பல விதங்களிலும் பாராட்டுக்கள். இனியும் அப்படியான தேர்வுகள் அங்கே தொடரும். தெலுங்கில் சொல்லிக் கொள்கிற மாதிரி நடித்து பெயர் எடுக்க வேண்டும்.

“”முன்பிருந்தது போல் இல்லை…. சம்பள விஷயத்தில் அஞ்சலி இப்போது கறார்…” என கோலிவுட் வட்டாரங்களில் பேசுவதை கேட்க முடிகிறது…?

எனக்கும் அந்த செய்தி வந்தது. நயன்தாராவுக்கு ஈடாக சம்பளம் கொடுத்தால்தான் நடிப்பேன் என்றெல்லாம் சொன்னதாக சொன்னார்கள். சிலர் நயன்தாராவின் வாய்ப்புகளை தட்டி பறிப்பதாக எழுதினார்கள். அப்படி எதுவும் இல்லை. என் தகுதிக்கான சம்பளம்தான் பெறுகிறேன். நினைத்திருந்தால், சம்பளத்துக்காக நான் எதுவும் செய்திருக்க முடியும்.

சம்பளத்தை பொருட்டாக நினைத்திருந்தால் “கற்றது தமிழ்’, “அங்காடித் தெரு’, “எங்கேயும் எப்போதும்’ மாதிரியான படங்களில் என்னைப் பார்த்திருக்க முடியாது. இத்தனை பிரச்னைகளை கடந்தும், என்னை இயக்குநர்கள் தேடி வந்திருக்க மாட்டார்கள்.

ஸ்டார் ஹீரோக்களோடு நடிப்பதையே பெரும்பாலும் ஹீரோயின்கள் விரும்புவார்கள். ஆனால், நான் இப்போதும் கதைக்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து வருகிறேன். சினிமாவில் சம்பளம் பொருட்டல்ல. நல்ல கதைக்காக சம்பளத்தை விட்டுக் கொடுத்தும் நடித்தவள் நான். அதையெல்லாம் இப்போது சொன்னால் நன்றாக இருக்காது.

சினிமாவுக்காக இன்னும் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன… இன்னும் எத்தனை வருடங்கள் நடிக்க ஆசை…?

எல்லா இடங்களிலும் இருக்க ஆசை. அதை தீர்மானிக்கிற கதைகள் முதலில் வேண்டும். ஜோதிகா, அனுஷ்கா, நயன்தாரா போன்றவர்கள் போல் பக்குவப்பட்ட நடிப்பை கொடுக்கவும் விருப்பம் உள்ளது. அதற்கான கதைகளைத்தான் தேடி வருகிறேன்.

வெறும் கமர்ஷியல், கிளாமர் தாண்டி இன்னும் வெவ்வேறு இடங்களை தேடிப் பிடிக்க வேண்டும். அடுத்து வருகிற “காண்பது பொய்’ அது மாதிரியான இடத்தை தொடங்கி வைக்கும் என நினைக்கிறேன்.

சினிமாவில் ஆச்சரியமான இடங்களை அடைந்த பின் திருமணம், குடும்பம் என யோசிப்பேன். அதுவரை சினிமாதான் எல்லாம். சினிமாவைத் தவிர வேறு எது பற்றியும் யோசிக்க நேரமில்லை.

Subscribe to get more videos :