Sunday, April 3, 2016

ஹலோ நான் பேய் பேசுறேன் விமர்சனம்



நடிப்பு: வைபவ், ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ், விடிவி கணேஷ், யோகி பாபு, கருணாகரன்
இசை: சித்தார்த் விபின்
தயாரிப்பு: சுந்தர் சி
இயக்கம்: எஸ் பாஸ்கர்

பேய்கள் (சீஸன்) ஓய்வதில்லை என்பதை தமிழ் சினிமா கால காலமாக மெய்ப்பித்து வருகிறது. இந்த வெள்ளிக்கிழமை வெளியான நான்கு படங்களில் இரண்டு பேய்ப் படங்கள் என்றால், பேய்கள் ஆதிக்கம் கோடம்பாக்கத்தில் எந்த அளவுக்கு கொடிகட்டிப் பறக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.இந்தப் படத்தில் பேயை உருட்டி உருட்டி மரப்பாச்சி விளையாடியிருக்கிறார்கள்.அவ்வப்போது சின்னதும் பெரிதுமாக திருடிக் கொண்டிருக்கும் வைபவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல். ஐஸ்வர்யாவின் அண்ணன் சாவுக் குத்து போடும் விடிவி கணேஷ். குத்தாட்டம் தெரிந்தவனுக்குத்தான் என் தங்கை கொடுப்பேன் என்று நூதன கண்டிஷன் போட, அதை ஏழே நாளில் கற்றுக் கொள்வதாக நூதன சபதம் போட்டு, அதில் ஜெயிக்கிறார். இருவரும் கல்யாணம் பண்ணிக்கொள்ளும் நேரத்தில் ஒரு செல்போன் ரூபத்தில் ஓவியா பேய் குறுக்கிடுகிறது. பேயை விரட்டினார்களா, கல்யாணம் நடந்ததா என்பது மீதி ஒரு மணி நேரப் படம்.

இந்தப் படத்தில் பேய் பெரிதாக பயமுறுத்தவில்லை. ஏதோ பக்கத்துவீட்டுப் பெண் மாதிரி கொஞ்சம் மென்மையாகவே வந்து போகிறது.ஆனால் பேய் வருவதற்கு முந்தைய முக்கால் மணி நேரப் படம் செம கலகலப்பு. பாஸ்கரின் டைமிங் வசனங்கள் நான் ஸ்டாப் சிரிப்புக்கு உத்தரவாதம்.அதிலும் யோகி பாபுவும் அவரது நண்பர்களும் 'கம்போசிங்கில்' ஆஷிக் 2 பாடலைப் பாடும் காட்சி வயிற்றைப் பதம் பார்க்கிறது!சாவுக் குத்தில் உண்மையிலேயே இத்தனை வகை இருக்கிறதா... சுவாரஸ்யமான தகவல்.வைபவ் இந்தப் படத்தில்தான் இயல்பாக நடித்திருக்கிறார். பக்கா சென்னை லோக்கல் பார்ட்டியாக குத்தாட்டத்திலும் வெளுக்கிறார். ஐஸ்வர்யாவுடனான அவரது காதலின் பின்னணி புதுசாக இருக்கிறது. சேட்டு, சேட்டு என இருவரும் லவ்வும் இடங்கள் அழகு.அப்பாவி ஐஸ்வர்யாவை விட, பேய் பிடித்த ஐஸ்வர்யா பரவாயில்லை. ஆமா.. முதல் பாதியில் ஏன் இப்படி மேக்கப் வழிகிறது?

திருடனாக வரும் வைபவ் சென்னை பாஷை பேசி நடித்து சகல சாவு குத்து ஆட்டத்தையும் போட்டு அசத்தியிருக்கிறார். பேயுடன் இருக்கும் போது அவர் காட்டும் நடிப்பிற்கு பாராட்டுகளை கொடுக்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ், தான் நடிக்கும் படங்களை பக்குவமாக தேர்வு செய்வதிலேயே தொடர்ந்து ஜெயிக்கிறார். இதிலும் அப்படியே. பேயாக மாறும் தருணத்தில் அவருடைய நடிப்பு மிரட்டுகிறது. ஓவியா, அடையாளமே தெரியாத பேயாக, பாய்ந்து, பறந்து, பயமுறுத்தி அசத்தியிருக்கிறார்
படத்தில் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகமாக கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சித்தார்த் விபின். பின்னனி இசையிலும் மிரட்டியிருக்கிறார். பானுமுருகனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்தின் எடிட்டிங்கும் படத்திற்கு பலமே…

திரைக்கதையில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் முழுக்க முழுக்க காமெடியையே குறிக்கோளாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான பேய் படங்களில் பேய் இருட்டில் வெள்ளை அல்லது கருப்பு உருவத்தில் இருக்கும். சில பேய் கோரமான உருவத்துடன் இருக்கும் திடீர் திடீர் என திரையில் தோன்றும். ஆனால் இந்த படத்தில் சற்று வித்தியாசமாக ஸ்மார்ட் போனில் பேய் வருகிறது. இயக்குநரின் இந்த வித்தியாசமான முயற்சிக்காகவே அவரை பாராட்டலாம்.

முதல் பாதியில் சிரிப்பலையில் அதிரும் அரங்கம், இரண்டாம் பாதியில் சற்று குறைந்து விடுகிறது. இரண்டாம் பாதியில் காமெடி தளத்திற்கு அதிகம் இடங்கள் இருந்தும் இயக்குநர் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

“‘ஹலோ நான் பேய் பேசுறேன்’- நன்றாகவே பேசியிருக்கிறது!”


Stars 3.5/5 - ஸ்ரீநாத் கலாசல்

Subscribe to get more videos :