Wednesday, November 9, 2011

ஆளவந்தான் - விமர்சனம்



இந்திய வரலாற்றில் ஹாலிவுட்டுக்கு இணையாக செலவு செய்யப்பட்ட படம். தொழில் நுட்பத்தில் புதுயுக்தி! இந்த பெருமைகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு பார்த்தால் ஆளவந்தானுக்கு பெரிய எழுத்தில் ஒரு ஸாரி! சிறுவயதில் சித்தி கொடுமையில் சிக்கிக் கொள்ளும் அண்ணன் தம்பிகளில் ஒருவர் மிலிட்டிரி ஆபிசர். மற்றொருவர் மனநோயாளி. இரண்டு பேருமே கமல் என்பதால் சராசரி பராக்கிரமத்தை காட்ட வேண்டிய சூழ்நிலை. இதில் மனநோயாளிக்கு பொருந்தியிருக்கிற வேடம், மிலிட்டிரிக்கு இல்லை என்பது பச்! 

மிலிட்டிரி ஆபிசர் வழக்கமான கமலாக மாறி அடிக்கடி காதலி ரவிணாடண்டனின் தோல்பகுதியை செப்பனிடுகிறார். ஆனால் க்ளைமாக்சில் மனநோயாளியை துரத்திச் செல்லும் பைட் மிக மிக த்ரில். சண்டை இயக்குனருக்கும், கமலுக்கும் பிரமிப்புடன் ஒரு சல்யூட் போடலாம். முக்கியமாக கிராபிக்ஸ் இயக்குனருக்கு. 

மொட்டைக்கமலின் ஒவ்வொரு அசைவும் ஆச்சர்யத்தை தூண்டுகிறது. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நுழைந்தவர் முன் அங்கிருக்கும் பொருட்கள் பேசுவதும், நியூஸ் வாசிக்கும் பெண் கமலின் சித்தியாக மாறி 'வேசி மகனே' என்று ஏசுவதும் அந்த கடையையே கமல் துவம்சம் செய்வதும், சுவாரஸ்யமான பரபரப்பு. ஆனால் திடீரென்று கார்ட்டூன் ஸ்டைலில் அந்த காட்சிகள் தொடர்வது சுவாரஸ்யத்தை நசுக்கிவிடுகிறதே...! அதே போல் மனிஷாவை கொல்லும் சில முக்கியமான காட்சிகள் எல்லாம் கார்டூன் மூலம் சொல்லப்படுவதால் மனதில் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையென்பது வருத்தம். 

கமலைத்தவிர மற்ற முகங்கள் எல்லாம் வடக்கத்திய சாயல் என்பதால் பல காட்சிகள் மனதில் ஒட்டாததும் துரதிருஷ்டம். பிளாஷ்பேக்கில் டைரி எழுதும் இளம்சிறுவன் தன் வயதுக்கு மீறிய வார்த்தைகளை உபயோகித்திருப்பது ஏனோ? (குறிப்பாக 'அப்பாவின் பகல்கள் சுருங்கின. எங்களின் இரவுகள் நீண்டன' போன்ற வார்த்தைகள்)

தீவிரவாதி உள்ளே நுழையும் நேரத்தில் நியூஸ் ஒடுவதும், செய்தி வாசிப்பவர், 'தீவிரவாதி ஒருவன் தப்பிவிட்டான்' என்ற ஒரு வரியை மட்டும் சொல்லிவிட்டு 'இத்துடன் செய்திகள் முடிந்தன' என்று சொல்லி விடைபெறுவதுமான வழக்கமான சினிமா அபத்தங்கள் இதிலும் உண்டு!

பாடல்கள் எதிலும் சிரத்தையில்லை. 'கடவுள் பாதி மிருகம் பாதி' ஒன்றைத்தவிர! 
ஒளிப்பதிவாளரின் பெயருக்கேற்ற ஒளிப்பதிவு. திரு! 

இதையெல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் (மொட்டை) கமல் என்ற ஆச்சர்யத்தை மட்டுமே ஆச்சர்யம் விலகாமல் 
ரசிக்கலாம். 

திறமை பாதி. அறுவை பாதி இரண்டும் செய்த கலவைதான்!. விஷ§வல் உண்டு, கேஷ§வல் இல்லை! விளங்க முடியா படம் இது.

-ஆர்.எஸ்.அந்தணன்.

Subscribe to get more videos :