Sunday, November 27, 2011

அட்டகாசம் - விமர்சனம்



பல நாள் பசியோடிருந்த புலியின் கூண்டை திறந்துவிட்டால் என்னாகும்? அஜீத்தை திறந்துவிட்டிருக்கிறார் சரண். சுய கோபத்தை கூட சுவாரஸ்யமாக மென்று துப்பியிருக்கிறார் அஜீத். ''நீதான் நம்பர் ஒன் டிரைவிங் ஸ்கூல் வச்சுருக்கறதா பேட்டி கொடுத்தியாமே?'' எடுபிடி ஒன்று ஏடாகூடமாக கேட்க, ''ஆமா... அதிலென்ன தப்பு? நான்தான் நம்பர் ஒன்னுன்னு என்னை நினைச்சிட்டிருக்கேன். அதனால் உனக்கென்ன..?'' என்று சொல்லிவிட்டு தன்னுடைய எதிரியான இன்னொரு நடிகரின் மென்னியை பிடிக்கிறார். வேறொரு காட்சியில் ''என்னைவிட ரொம்ப பேசுறானே'' என்று சதாய்க்கிறார். தியேட்டரில் விசில் அடித்தே பிராணனை பொசுக்கிக் கொள்கிறார்கள் ரசிகர்கள். 

கதை என்னவோ, அந்த காலத்து எம்.ஜி.ஆர் படத்தின் சாயல். அதை கரகர மொறுமொறு விறுவிறு சுவையுடன் கொடுத்த வகையில், ரேசில் கிடைக்காத வெற்றிக் கோப்பையை லேசில் வாங்கி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரண். 

பெற்ற அம்மாவால் வலுக்கட்டாயமாக தத்துக் கொடுக்கப்படும் ஒரு அஜீத், தாதா! இன்னொரு அஜீத், தன்னுடைய டிரைவிங் ஸ்கூல் உண்டு. தான் வளர்க்கும் நாய் உண்டு என்று அடங்கி கிடக்கும் அப்பாவி. இடம் மாறுகிறார்கள் இருவரும். என்ன நடக்கிறது என்பதை முனியாண்டி விலாஸ் காரத்துடன் பரிமாறியிருக்கிறார் சரண். 

சாத்துக்குடி பிழிவதை போல் எதிரிகளை பிழிகிறார் தூத்துக்குடி தாதா அஜீத். இவருக்கும் வில்லனுக்கும் நடக்கிற யுத்தத்தில் மாட்டிக் கொள்கிற அப்பாவி அஜீத், தப்பிக்கிற ஒவ்வொரு காட்சியும் ஜாலியோ ஜாலி. இவருக்கு ஜால்ராவாக ரமேஷ்கண்ணா. ரஜினிக்கு போட்ட ஜதியை மாறாமல் அடித்திருக்கிறார் அஜீத்திற்கும்! 

பூஜாவின் நாய்க்கும், அஜீத்தின் நாய்க்கும் இடையே நடக்கும் டேட்டிங் பிரச்சனையில் அஜீத், பூஜா மாட்டிக் கொள்வது ஐயே... ரகம். அஜீத் படத்தில் இப்படியெல்லாம் காட்சிகளா? தப்பு தல தப்பு! 

பூஜாவுக்கு வெறுமனே வந்துபோகிற வேலை. கற்பனை குதிரையை தட்டிவிட்டு அயல்நாட்டில் இவர்கள் ஆடும் டூயட், சின்ன சின்ன இடைவேளைகள். 

கதையில் பாதி தூத்துக்குடி பகுதிகளில் நடப்பதால், என்னலே,... சீவிப்புடுவம்லே... என்று வார்த்தைக்கு வார்த்தை ''லே'' போடுகிறார்கள். தலவலி லே...

அம்மாவை பழிவாங்க சென்னைக்கு வரும் அஜீத், கூட இருந்தே, குழி பறிக்கும் காட்சிகள் திகில் நிறைந்த சுவாரஸ்யம். அடிக்கடி ரன்னிங் காமெண்ட்ரி கொடுக்கும் சிசர் மனோகர், பைத்தியமா? அஜீத்தின் நண்பனா? குழப்பம். 

கருணாஸ் ஆட்டோவை ஸ்டார்ட் செய்யும் போதெல்லாம் தன் பலத்தை பிரயோகித்து ஆட்டோவை ஓட விடாமல் செய்யும் அஜீத் கோஷ்டி ஒரு கட்டத்தில் கருணாசை பைத்தியக்காரனாக்கி ரசிப்பதை தியேட்டரே, கீழ்ப்பாக்க கிறுகிறுப்போடு ரசிக்கிறது. ரொம்ப நாளைக்கு பிறகு உச்சி முதல் பாதம் வரை சிரிக்க வைத்திருக்கிறார் கருணாஸ். 

பரத்வாஜின் இசையும், வைரமுத்துவின் வரிகளும் கைகோர்த்துக் கொண்ட, அந்த ''உனக்கென்ன'' பாடல், நமக்கென்ன என்று போக முடியாதபடி கட்டி இழுக்கிறது. 

சூப்பர் சுப்பராயனின் ஃபைட்டும் சரி, வெங்கடேஷின் கேமிராவும் சரி. பம்பரமாக சுழன்று பரபரப்பை தருகிறது. 

அஜீத்தின் அட்டகாசமாச்சே... ரசிக்காமல் இருக்க முடியுமா? 

-ஆர்.எஸ்.அந்தணன். 
நன்றி தமிழ்சினிமா.காம்....

Subscribe to get more videos :